வாழ வேண்டுமென்ற ஆசை இயற்கையானதே. அது என்னிடமும் உள்ளது. அதை நான் மறுக்க
விரும்பவில்லை. ஆனால் அந்த ஆசை
நிபந்தனைகளுக்குட்பட்டது.
ஒரு சிறைக் கைதியாகவோ நிபந்தனை வரம்புகளுக்கு
உட்பட்டவனாகவோ வாழ எனக்கு விருப்பமில்லை. என் பெயர் இந்தியப் புரட்சியின் அடையாளச்
சின்னமாகியுள்ளது. புட்சிகரக் கட்சியின் கொள்கையும் தியாகங்களும், ஒருவேளை நான்
உயிர் வாழ்ந்தாலும் என்னால் ஒருபோதும் அடையமுடியாதவொரு உயரத்திற்கும் அப்பால் என்னை
ஏற்றி வைத்துள்ளன.
இன்று என் பலவீனங்களை மக்கள் அறியமாட்டார்கள். ஒரு வேளை
தூக்கு மேடையிலிருந்து நான் தப்பிப் பிழைத்தால் அந்த பலவீனங்கள் எல்லாம் அவர்கள்
முன்னால் வெளிப்படக்கூடும். புரட்சியின் அடையாளச் சின்னம் களங்கப்பட்டு நிற்கலாம்.
அல்லது ஒருவேளை அது முற்றாக மறைந்தும் போகலாம்.
அவ்வாறின்றி துணிச்சலோடும் புன்னகையோடும்
நான் தூக்குமேடையேறினால், அது இந்தியத் தாய்மார்களின் உணர்வுகளைத் தூண்டும்.
தங்களது பிள்ளைகளும் பகத்சிங்கைப் போல் ஆக வேண்டுமென்று அவர்கள் விரும்புவார்கள்.
இதன் மூலம் நாட்டின் விடுதலைக்காக தங்களது உயிர்களையும் தியாகம் செய்யச்
சித்தமாயிருப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும். அதன் பிறகு, புரட்சிப்
பேரலையை எதிர்கொள்வதற்கு ஏகாதிபத்தியத்தால் முடியாமல் போகும். அதன் முன்னோக்கிய
அணிவகுப்பை அவர்களது வாள் வலிமையாலும் எல்லா வகை அசுர முயற்சியாலுங்கூட தடுத்து
நிறுத்திவிடமுடியாது.
ஆம், ஒரு விசயம் இன்றும் கூட என்னைத் துளைத்துக்
கொண்டிருக்கிறது.
மனித குலத்திற்கும் என் நாட்டிற்கும் ஏதாவது செய்ய வேண்டி
சில குறிக்கோள்களை எனது இதயத்தில் பேணி வளர்த்தேன். அந்தக் குறிகோள்களில்
ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. ஒரு வேளை நான்
உயிரோடிருந்தால் அவற்றை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைக்கலாம். நான்
சாகக்கூடாது என்ற எண்ணம் எப்போதாவது என் மனதில் உண்டாகக் கூடுமானால், அது இந்த
நோக்கத்தில் இருந்து மட்டுமே உண்டாகும்.
இந்நாட்களில் என்னைப் பார்த்து நானே
பெருமைப்பட்டுக் கொள்கிறேன். கடைசிக் கட்டச் சோதனைக்காக நான் ஆவலுடன்
காத்திருக்கிறேன். அந்த நாள் வெகு சீக்கிரத்தில் வர வேண்டுமென்றும்
விரும்புகிறேன்.
உங்கள் தோழன்
பகத்சிங்.
1931மார்ச் 22
இது
பகத் சிங்கின் கடைசிக் கடிதம்.
1931 மார்ச் 23 அன்று மாலை 7.35 க்கு லாகூர்
சிறையில் பகத் சிங் தூக்கிலிடப்பட்டார். அவரது இறுதி வார்த்தைகள்.
இன்குலாப்
ஜிந்தாபாத்!